ஆதி காமாக்ஷி பீடம் (காஞ்சிபுரம்):

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கும், காமக் கோட்டம் என்று குறிக்கப் பெறும் மிகப் பிரசித்தி பெற்ற காமாக்ஷி அன்னை திருக்கோயிலுக்கும் இடையில் (குமரக் கோட்டத்திற்கு அருகில்) அமைந்துள்ளது மிகப் புராதனமான 'ஆதி காமாட்சி திருக்கோயில்'. காஞ்சி காமக்கோட்டத்தில் காமாட்சியாய் உமையன்னை கோயில் கொள்வதற்கு மிகமிக முன்னரே ஆதி காமாட்சியாய் இங்கு எழுந்தருளி இருக்கின்றாள். அன்னை சதி தேவியின் இடுப்பு (திருஇடை) எலும்பு விழுந்த இடம் இதுவே என்று மேருதந்திரம் எனும் ஆகம நூல் நமக்கு அறிவிக்கின்றது (ஆதார நூல்: 51 அட்சர சக்தி பீடங்கள், ஆசிரியர்: சேவா ரத்னா திரு. ஜபல்பூர் நாகராஜ் சர்மா அவர்கள், விகடன் பிரசுரம்).

ஆதி சக்தி பீடேஸ்வரியான அன்னை இங்கு காளிகாம்பிகையாய் எழுந்தருளி இருக்கின்றாள், நான்கு திருக்கரங்களோடு அதி கம்பீரத் திருத்தோற்றத்தில் கோயில் கொண்டுள்ள இவள் பின்னிரு கரங்களில் பாச அங்குசங்களோடும், முன்னிரு கரங்களில் அபய ஹஸ்தம் மற்றும் அட்சய பாத்திரத்தோடும் திருக்காட்சி அளிக்கின்றாள். தரிசிக்கும் அடியவர்களின் உடல் உள்ளம் ஆன்மா இவையாவையும் உருக வைத்துச் சிவானந்தப் பேற்றினை அளித்து அருளும் அதி ஆச்சரியத் திருக்கோலம்.   
இவளின் தரிசினப் பேறு கிடைப்பது மிகவும் அரிது என்றும் இந்த அன்னையே திருவுள்ளம் கனிந்து அழைத்தால் மட்டுமே இத்தலத்தில் இவளைத் தரிசித்துப் பணியும் பரம பாக்கியம் கிட்டும் என்றும் இவ்வாலய அர்ச்சகர் விவரிக்கின்றார்.  

No comments:

Post a Comment