சக்தி பீடங்கள் தோன்றிய வரலாறு (சிவ புராணம் அறிவிக்கும் முக்கிய நிகழ்வுகள்):

Daksheshwar Mahadev temple in Kankhal
பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து ஆதிப் பரம்பொருளான சிவபெருமானிடம் 'பிரஜாபதி' பட்டத்தினையும், ஈரேழு புவனங்களின் தலைமைப் பதவியையும், உலகீன்ற உமையன்னையைப் புதல்வியாக அடையும் பெரும் பேற்றினையும் வரமாகப் பெறுகின்றான். அன்னையும் 'தாட்சாயணி' எனும் திருநாமத்தில் தட்சனின் அரண்மனையில் இனிது வளர்ந்து வருகின்றாள்.
Daksheshwar Mahadev temple in Kankhal
எண்ணற்ற ஆண்டுகள் சர்வ வல்லமையோடு ஆட்சி புரிந்து வந்த மமதையால் வரம் தந்த இறைவனை மெதுமெதுவே மறக்கின்றான் தட்சன், தன்னையே 'ஈஸ்வரன்' என்றும் எண்ணத் துவங்கி விடுகின்றான். இந்நிலையில் திருக்கயிலை நாதருக்கும் அன்னைக்கும் திருமண வைபவம் நிச்சயிக்கப் பெறுகின்றது, தட்சனோ 'கன்னிகா தானம் புரிகையில் என்னுடைய கரங்கள் உயர்ந்திருக்கப் பரமேஸ்வரரின் கரங்கள் தாழ்ந்திருக்குமே' என்று மமதையோடு எண்ணுகின்றான். ஆணவ மலத்துடன் அண்டர் நாயகனை அணுகவும் ஒண்ணுமோ? மணநாளுக்கு முன்னரே (தட்சன் அறியாத நிலையில்) மகாதேவர் அன்னை சதி தேவியைத் திருக்கயிலைக்கு அழைப்பித்துக் கொள்கின்றார்.
Daksheshwar Mahadev temple in Kankhal
Daksheshwar Mahadev temple in Kankhal
இதன் தொடர்ச்சியாக நடந்தேறிய நிகழ்வுகளால், வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு, ஹரித்வாரின் கங்கைக் கரையிலுள்ள 'கனகல்' எனும் தலத்தில் பெரும் யாகமொன்றினையும் துவங்குகின்றான். அம்பிகையோ தட்சனுக்கு அவனுடைய தவறினை உணர்த்தித் திருத்தும் பொருட்டு யாக சாலையில் தோன்றுகின்றாள்.
Daksheshwar Mahadev temple in Kankhal
தட்சனோ ஜகத் ஜனனியான உமையன்னையை அவமதித்ததோடு, சிவபெருமானையும் கடுமையாக நிந்தித்துப் பேசுகின்றான். சிவ நிந்தனையைக் கேட்கப் பொறாத அன்னை, சிவ அபராதியான தட்சனின் புதல்வியாக எடுத்திருந்த தன்னுடைய தேகத்தினை முற்றிலும் அழித்தொழிக்கும் பொருட்டு, யோகத் தீயினால் யாக குண்டமொன்றை அவ்விடத்திலேயே தோற்றுவித்து, அதனுள் தன் திருமேனியினை மாய்த்துக் கொள்கின்றாள்.
Daksheshwar Mahadev temple in Kankhal
சிவபெருமானின் கடும் கோபத்திலிருந்து வெளிப்படும் அன்னை காளி மற்றும் வீரபத்திரர் இருவரும் தட்சனின் யாக சாலையில் தோன்றி, அங்குள்ளோர் அனைவரையும் வதைத்து, யாக சாலையை சர்வ நாசத்துக்கு உள்ளாக்கிய நிகழ்வினைச் சிவபுராணம் விரிவாகப் பேசுகின்றது. இத்தலத்தில் அன்னை சதி தேவி தன் திருமேனியினை மாய்த்துக் கொண்ட யாக குண்டத்தினை இன்றும் தரிசிக்கலாம்.
Sati devi in fire
ஆலமுண்ட இறைவர் கடும் சீற்றத்துடன் அன்னை சதி தேவியின் எரியுண்ட திருமேனியைச் சுமந்த வண்ணம் ஊழிக் கூத்தினை ஆடத் துவங்க, அண்டங்கள் அனைத்தும் சிதறுண்டு மகாப் பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றுகின்றது. பாற்கடல் வாசனாரான ஸ்ரீமகா விஷ்ணு வேத முதல்வரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் அன்னையின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்ய, அக்கண முதல் அவை 51 சக்தி பீடங்களாகத் திகழ்கின்றன.
veerabhadra destroys daksha yagna
பின்னர் சிவபெருமானின் திருவருளால் ஆட்டுத் தலையினைப் பெற்று உயிர்த்தெழும் தட்சன் மறை மூர்த்தியின் திருவடி தொழுகின்றான். இறைவனின் இருப்பை உணரவும், தர்மங்களை பின்பற்றவும் மறுக்கும் ஒவ்வொருவரும் தட்சனின் வடிவங்களே. ஆன்மாக்கள் முதலில் இறைவனை மறுப்பதும், அறியாமையால் எதிர்ப்பதும், பின்னர் ஞானம் பெற்றுப் பணிவதும் காலகாலமாக நடந்து வரும் போராட்டம். ஆட்டின் தலை அஞ்ஞானத்தைக் குறிப்பது. ஞானம் என்றுமே அஞ்ஞானத்தை வெல்லும் என்பது இந்நிகழ்வின் உட்குறிப்பு.

Daksha and Lord Shiva

No comments:

Post a Comment