அபிராமி அந்தாதி தோன்றிய தை அமாவாசைத் திருநாள்:

'தாரமர் கொன்றையும்' என்று துவங்கும் விநாயக வணக்கத் திருப்பாடலில் துவங்கி, வார்த்தைகளால் விளக்கவொண்ணா இனிமை பொருந்திய 100 அற்புதத் திருப்பாடல்களால் கோர்க்கப் பெற்றிருப்பது அபிராமி பட்டர் அருளியுள்ள 'அபிராமி அந்தாதி'. 

அபிராமி பட்டர் அருள் பெற்றுள்ள நிகழ்வினை அறிந்து கொள்வது முதற்படி எனினும் அப்பெருமகனார் அருளியுள்ள திருப்பாடல்களைப் பாராயணம் புரிந்து பயன்பெறுவதே நம் இறுதி நோக்கமாக இருத்தல் வேண்டும். அனுதினமும் 5 திருப்பாடல்கள் வீதம் பாராயணம் புரிந்து வந்தாலே, 20 நாட்களில் அனைத்து திருப்பாடல்களுடனும் முதல்கட்ட பரிச்சியம் ஏற்பட்டு விடும். இவ்விதமாய் இயல்பாகவே பாடல்கள் மனனமாகும் வரையில், இதே முறையில் பாராயணத்தைத் தொடர்ந்து வருதல் சிறப்பு. 

இத்திருப்பாடல்கள் யாவும் அருள்நிலையில் அபிராமி பட்டரின் திருவாக்கிலிருந்து வெளிப்பட்டவை, அதீத மந்திர சக்தி பொருந்தியவை. ஆதலின் இன்ன பாடலுக்கு இன்ன பலன் எனும் சிந்தனையை விடுத்து, வாரம் அல்லது மாதம் ஒருமுறையேனும் இத்தொகுப்பின் 100 திருப்பாடல்களையும் முழுமையாய்ப் பாராயணம் புரிவோம், அமிர்தகடேஸ்வரப் பரம்பொருளின் இடபாகத்துறையும் அன்னை அபிராமியின் பரிபூரணத் திருவருளுக்கு உரியராகி, நற்பலன்கள் யாவையுமே பெற்று வாழ்வோம். 

(திருப்பாடல் 41):
புண்ணியம் செய்தனமே மனமே, புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும்கூடி; நம்காரணத்தால்
நண்ணிஇங்கேவந்து, தம்அடியார்கள் நடுஇருக்கப்
பண்ணி, நம் சென்னியின்மேல் பத்ம பாதம் பதித்திடவே!!!

(திருப்பாடல் 50):
நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச 
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு 
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி!என்  
றாய கியாதி உடையாள் சரணம்-அரண்நமக்கே.

(திருப்பாடல் 69):
தனம் தரும்; கல்வி தரும்; ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும்; தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே;
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!!!'

(திருப்பாடல் 77):
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே!!!